காதலர் தின ஸ்பெஷல்… உங்கள் காதலியை மயக்கும் அழகிய கவிதைகள்

480
காதலர் தின ஸ்பெஷல்... உங்கள் காதலியை மயக்கும் அழகிய கவிதைகள்
காதலர் தின ஸ்பெஷல்... உங்கள் காதலியை மயக்கும் அழகிய கவிதைகள்

காதலர் தின ஸ்பெஷல்… உங்கள் காதலியை மயக்கும் அழகிய கவிதைகள்

உலகத்தில் உள்ள அனைத்து காதலர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக காதலர்கள் தினம் நெருங்கி விட்டது. காதலை சொல்ல தயங்கி கொண்டிருந்தவர்கள், காதலை ஏற்பதற்கு தயங்கி கொண்டிருந்தவர்கள், காதலித்து கொண்டிருப்பவர்கள் ஏன் திருணம் ஆனவர்கள் கூட காதலர் தினத்தன்று தன் அன்பை வெளிப்படுத்தும் நாளாக காதலர் தினம் இருக்கிறது. இந்த நொடி வரை உலகம் அழிவின்றி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க காதல்தான் அடிப்படையாக இருக்கிறது. காதலின்றி வாழவும் முடியாது, காதலிக்காமல் வாழவும் முடியாது என்பதே உண்மை

காதல் எந்த வடிவில் இருந்தாலும் அழகுதான், அவசியம்தான். ” பிறரை நேசிக்காத வாழ்வும் ஒரு வாழ்வோ” என்று கூறுவார்கள், அதன்படி அன்புதான் நம் வாழ்க்கையை வழிநடத்தி செல்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. காதலை ஒரு நாளிற்குள் அடைக்கவும் முடியாது, கொண்டாடி தீர்க்கவும் முடியாது. ஏனெனில் அது ஆயுள் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு அற்புதமாகும். உங்கள் மனதில் காதல் இருக்கும்வரை தான் நீங்கள் மனிதனாக இருக்கமுடியும். ஆண்டு முழுவதும் காதலை கொண்டாடி தீர்த்தாலும் காதலர் தினத்தன்று சற்று கூடுதலாக கொண்டாட வேண்டும். இந்த வருட காதலர் தினத்தை இந்த கவிதைகளுடன் கொண்டாட தயாராகுங்கள்.

கவிதை 1

” உன் இதயத்திற்கு கற்றுத்தந்தது போல

உன் விழிகளுக்கும் கற்றுக்கொடு கண்மணியே

காதலை மறைக்க…

சகியே.. உன் கண்களே சொல்கிறதடி என் மீதான

உன் காதலை… ”

கவிதை 2

” நான் சொல்வேன் என நீயும்

நீ சொல்வாய் என நானும் நினைத்தே

யுகங்களென நாட்களை கடத்தியது போதும்…!

கண்மணியே…! நானே சொல்லிவிடுகிறேன் நம் காதலை

முன்மொழியத்தான் மறுத்துவிட்டாய்

வழிமொழிந்தாவது விடு…!

கவிதை 3

” நீ எனக்கு தரும் முத்தங்களை திருடி

வெறும் சத்தங்களை தரும் உன் அலைபேசி

என் அனுமதியின்றி உன்னை தீண்டும் மழைத்துளி

தங்கமுன்னை நான் சுமக்க தவமிருக்கும் போது உன்

அங்கம் சுமக்கும் உன் SCOOTY என

உன்னை தீண்டும் அனைத்தின் மீதும் தீராத கோபம்தான் எனக்கு…! ”

கவிதை 4

” ஒரே ஒரு முறை உன்னை காதலில்

ஜெயிக்க அனுமதி கொடு கண்ணே…!

காலம் முழுவதும் தோற்றுகொண்டே இருப்பேன்

உன்னிடம் கணவனாக…! ”

கவிதை 5

” எனது உலகம் எவ்வளவு சிறியது பார்த்தாயா?

உன்னில் தொடங்கி, உன்னுள்ளயே முடிந்து விடுகிறது…!

கவிதை 6

” புவியின் ஈர்ப்பு விசையை நினைத்து

பிரம்மிப்போர்க்கு எப்படி தெரியும்…

என்னை மயக்கும்

உன் விழியின் ஈர்ப்பு விசையின் அழகு

கவிதை 7

” தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று

பள்ளியில் படித்த போது புரியவில்லையடி…!

நீ அருகில் இருந்தும் தீண்ட முடியாத

இந்த நொடியில்தான் புரிகிறது…!

கவிதை 8

” அழகான ஏற்ற இறக்கமும்

அளவான அசையும், நடையும்

இருப்பதால்தான் என்னவோ

நீ நடமாடும் கவிதையாக இருக்கிறாய்…! ”

கவிதை 9

” தயவு செய்து சாபமிடவாவது

என்னுடன் பேசிவிடு…

நான் கேட்கும் வரமே உன்னுடன்

பேசவேண்டும் என்பதுதான்… ”

கவிதை 10

” என் காதலை மறுப்பது உனக்கு ஒருவேளை

பெருமையாக இருக்கலாம்…!

எனக்கு உன்னை காதலித்ததே பெருமைதான்…! ”

கவிதை 11

” கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டமென்று

சொன்னவர்கள் அது யாருக்ககென்று

சொல்லவில்லையே…!

உன் கன்னக்குழியில் நான் விழுந்தது

எனது அதிர்ஷ்டம்தான்…! ”

கவிதை 12

” அழகான இடத்திற்கு அழைத்துசென்று

என் காதலை சொல்ல ஆசைதான்…! ஆனால்

நீ என்னுடன் இருக்குமிடம் எல்லாமே

அழகாய் தெரிகிறதே என்னதான் நான் செய்ய? ”

கவிதை 13

” என்ன தவம் செய்ததோ

உன் தொடுதிரை அலைபேசி

நித்தமும் உன் விரல்கள் தீண்டுவதற்கு…! ”

கவிதை 14

” இடைவிடாது பேசும் உன் இதழ்கள்

அழகென்றால்…!

இடையிடையே பேசும் உன் விழிகள்

பேரழகு…! ”

கவிதை 15

” எப்பொழுதும் நண்பனாய், சிலசமயம் செல்ல எதிரியாய்

நீ கட்டியணைக்கும் கரடி பொம்மையாய்

உன் கண்ணீர் சுமக்கும் தலையணையாய்

பாசமாய் உன் கேசம் கோதும் தாயாய்

உன் கொடுஞ்சமையல் பொறுக்கும் தந்தையாய்

நீ விளையாடி மகிழும் குழந்தையாய்

காலம் முழுவதும் இம்சிக்கும் கணவனாய்

மாறிவிட நான் தயாரடி கண்ணே…!

என் இனிய இம்சைகளை தாங்கிக்கொள்ள மட்டும்

சம்மதம் கொடு போதும்…! ”

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்