அமீரகத்துக்கு வந்த முதல் போப் – பிரார்த்தனை கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

103
அமீரகத்துக்கு வந்த முதல் போப் - பிரார்த்தனை கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு
அமீரகத்துக்கு வந்த முதல் போப் - பிரார்த்தனை கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

அமீரகத்துக்கு வந்த முதல் போப் – பிரார்த்தனை கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமாக இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் அரண்மனை இயங்கி வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தற்போதைய தலைமை மதகுருவாக போப் பிரான்சிஸ் பதவி வருகிறார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த (2019) ஆண்டு சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட போப் முன்னர் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் “மதங்களுக்கு இடையிலான உறவின் வரலாற்றில், ஒரு புதிய பக்கத்தில் உங்களின் நேசமிக்க தேசத்தில் எழுதுகிறேன். நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரர்கள்தான்” என தெரிவித்திருந்தார்.

அவ்வகையில், அராபிய நாடுகளுக்கு செல்லும் முதல் வாடிகன் தலைவர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தொடங்கினார்.

வாடிகனில் இருந்து தனிவிமானத்தில் புறப்பட்ட அவர் அபுதாபி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான், போப் பிரான்சிசை நேரில் வரவேற்றார்.

நேற்று காலை போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து அவர் அரண்மனைக்கு சென்று அரச குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது அவருக்கு அரண்மனை வாயிலில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முப்படையினர் அணிவகுப்புடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போப், மத்திய வளகுடா பகுதியில் போர் பதற்றம் தணிந்து அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக, ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லிபியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

வளைகுடா நாடுகளில் வாழும் அனைத்து மத நம்பிக்கையுடைய மக்களும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கு நடந்தாலும் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த அரசுகள் முன்வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், அபுதாபி நகரில் உள்ள ஸயெத் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற மத நல்லிணக்க பொதுக்கூட்டம்  மற்றும்  சிறப்பு பிரார்த்தனையில் (திருப்பலி)  போப் பிரான்சிஸ் பங்கேற்று உரையாற்றினார். அவரது பேச்சை கேட்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் அரங்கத்தில் திரண்டிருந்தனர். சுமார் 10 ஆயிரம் முஸ்லிம்களுக்கும் அழைப்பிதழ் தரப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதுதவிர, வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட தொலைக்காட்சிகள் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போப் உரையாற்றியதை நேரலையாக கண்டு பரவசமடைந்தனர்.

காரில் வந்த போப் பிரான்சிஸ் இந்த அரங்கத்துக்குள் நுழைந்தபோது பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் ஜெப கீதங்களை இசைத்து ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

இஸ்லாமிய சட்டதிட்டங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் வெளிப்படையாக பொது இடங்களில் பிறமத வழிபாடுகளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போப் பிரான்சிஸ் இன்று பங்கேற்ற கூட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ளதைப்போல் தற்காலிக ஜெப மாடம் அமைக்கப்பட்டு, பெரிய அளவிலான சிலுவை ஒன்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுகளில் இருந்து வேலை நிமித்தமாக அரபு நாடுகளுக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ மக்களை குறிப்பிட்டு பேசிய போப் பிரான்சிஸ், ‘நீங்கள் எல்லாம் பிறந்த இடங்களைவிட்டு தொலைதூரம் வந்து, உங்களது அன்பிற்குரியவர்களையும்,உறவினர்களையும் பிரிந்து, இங்கு வாழ்ந்து வருவது சுலபமான காரியமல்ல.

அதிலும் எதிர்காலத்தை பற்றிய உத்தரவாதமில்லாமல் இங்கு வாழும் உங்களை கருணை மிக்க கடவுள் மறந்து விடுவதில்லை. தனது மக்களை அவர் கைவிடுவதுமில்லை’ என போப் பிரான்சிஸ் கூறியபோது உற்சாகமிகுதியில் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இன்றுடன் இங்கு தனது சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்யும் போப் பிரான்சிஸ் விரைவில் வாடிகன் அரண்மனையை சென்றடைவார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #PopeFrancisinUAE  #PopeFrancis